தை அமாவாசை : நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தை அமாவாசையை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆலயங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கானோர் நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

ஆண்டில் முக்கியமான அமாவாசை கருதப்படும் ஆடி அமாவாசைக்கு பிறகு முக்கியமானதாக கருதப்படுவது தை அமாவாசை ஆகும். தாய், தந்தையரை இழந்தோர் அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடித்து நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் தீர்த்தமாடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். ஆடி, புரட்டாசி அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்காதவர்களும் இந்நாளில் மூதாதையர்களுக்கு திதிகொடுக்கலாம் என்பது ஐதீகம். இதனையொட்டி அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திரளான பக்தர்கள் திரண்டு கடலில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் பச்சரிசி, பூ, தர்ப்பை புல், எள் போன்றவற்றை வைத்து அவற்றை தலையில் சுமந்து சென்று கடலில் புனித நீராடினர். பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் நதிக்கரைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் நதிக்கரைகளில் தங்கள் முன்னோர்களுக்கு இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் செய்தனர். 

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் வழிபாடு செய்தனர். அதிகாலை முதலே பொதுமக்கள் கடலில் நீராடிய பின் முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஆலயம் சென்று வழிபாடு செய்தனர்.

நாகை மாவட்டம் தாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர். கோடியக்கரையில் இறந்துபோன தங்கள் முன்னோர்கள், பெற்றோர் நினைவாக பிதுர்திதி கொடுத்து, எள் தர்ப்பணம் செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடினர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கைலாசநாதர் கோவில் முன்புள்ள படித்துறையில் எள், உப்பு படைத்து தங்களது முன்னோர்களை வழிபாடு செய்து ஆற்றில் நீராடினர். பின்னர் நவகைலாயங்களில் ஐந்தாவது ஸ்தலமாக விளங்கும் முறப்பநாடு கைலாசநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பல்வேறு சிறப்புகளுடன் கூடிய தை அமாவாசை தினமான இன்று ஏராளமான பொதுமக்கள் எள் கலந்த சாதத்தை முன்னோர்களுக்கு படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 

நாமக்கல் மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் ஏராளமானோர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். அதிகாலையிலே காவிரி ஆற்றில் புனித நீராடி, வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்மம் பூஜை செய்தனர். வாழை இலையில், பச்சரிசி, பூ, தர்ப்பை, பச்சரிசி, எள் போன்றவை வைத்து பூஜை செய்து அதனை காவிரி ஆற்றில் கரைத்து புனித நீராடினர்.

ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். ஸ்ரீ ராமபிரான் பாதம் பட்ட, ராமாயண காவியத்தோடு தொடர்புடைய சேதுக்கரை கடலில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.

திருவாரூர் கமலாலய தீர்த்தக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்தனர். அதிகாலை முதலே ஏராளமானோர் கமலாயத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களின் சாபங்களில் இருந்து விடுபடவும், முன்னோர்களின் ஆசி கிடைக்கவும் எள் தானியத்தைக் கொண்டு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மயிலாடுதுறை பூம்புகார் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கடற்கரை மற்றும் காவிரி சங்கமத் துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு சென்று விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு நடத்தினர்.


Night
Day