எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மக்களின் செல்லப் பிள்ளையான நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான சிவாலயமான நெல்லை நெல்லையப்பர் கோயிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காந்திமதி யானை இருந்து வந்தது. நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் முதலில் பார்த்து ஆசி பெறுவது காந்திமதி யானையிடம்தான். அந்த அளவிற்கு மக்களுக்கு செல்லப்பிள்ளையாக விளங்கிய 56 வயதான காந்திமதி யானைக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நிற்க முடியாமல் தரையில் படுத்தது. தகவல் அறிந்து சென்ற கால்நடை மருத்துவர்கள் யானையை மீண்டும் கிரேன் மூலம் நிற்க வைப்பதற்காக முயற்சி செய்தனர். ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை இன்று உயிரிழந்தது. நாளை போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், யானை உயிரிழந்ததால் பக்தர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
காந்திமதி யானை கடந்த சில மாதங்களாக வழக்கத்திற்கு மாறாக கூச்சலை எழுப்பி வந்தது.
இதனால், நெல்லையப்பர் கோயில் பக்தர்களும், பொதுமக்களும் நெல்லையப்பர் காந்திமதி யானை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளையும், புத்துணர்வு முகாமிற்கு அனுப்ப வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கோயில் நிர்வாகமும், இந்து அறநிலையத்துறையும் மெத்தன போக்கோடு செயல்பட்டதன் காரணமாகவே தற்போது காந்திமதி யானை உயிரிழந்துள்ளதாக பொதுமக்களும், பக்தர்களும் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி யானை உயிரிழந்ததை தொடர்ந்து கோயிலில் அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டன. சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதிகள் பூட்டப்பட்டுதுடன், கோயில் நடையும் சாத்தப்பட்டது. இதையடுத்து கோயில் சிவாச்சாரியார்கள் காந்திமதி யானையின் இறுதி சடங்கிற்கான பூஜைகளை தொடங்கினர். மேலும், பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி காந்திமதி யானைக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே காந்திமதி யானையின் இறப்பு தங்களை அதிர்ச்சி மற்றும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக சிறுவர்கள் முதல் பெரியோர் வரை கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, காந்திமதி யானையின் இறுதிச் சடங்குகள் முடிந்து கோயில் வளாகத்தில் இருந்து கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நெல்லை டவுனில் உள்ள நான்கு ரத வீதிகளையும் சுற்றி யானையின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அதன் பிறகு பொற்றாமரை குளம் அருகே யானையின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீருடன் பங்கேற்றுள்ளனர்.