பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் - ரூ.18,000 லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கட்டிட ஒப்பந்ததாரரிடம் இருந்து 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயற்பொறியாளர் பிரேம்குமார் கையும் களவுமாக பிடிபட்டார். 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திருமண மண்டபத்தை கட்டிவரும் ஒப்பந்ததாரர் செந்தில் குமாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் 21 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டி உள்ளது. 

இந்த பணத்திற்கான பணத்திற்கான காசோலையை பெற கோவிலில் பணிபுரியும் கட்டிட பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமாரை அவர் பலமுறை அணுகியுள்ளார். அப்போது கொடுக்க வேண்டிய தொகைக்கு லஞ்சம் தர வேண்டும் என பிரேம் குமார் கூறியதை அடுத்து, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்பந்ததாரர் செந்தில்குமார் புகார் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் ஆலோசனைப்படி ஒப்பந்ததாரர் செந்தில்குமார் திருக்கோவில் அலுவலகத்திற்கு சென்று செயற்பொறியாளர் பிரேம்குமாரிடம் 18 ஆயிரம் ரூபாயை இன்று கொடுத்துள்ளார். அதை பிரேம் குமார் பெற்றுக் கொண்டபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

varient
Night
Day