புனித வெள்ளி : கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை பவனி - இயேசு பிரானை சிலுவையில் அறைந்த நாளில் துக்கம் அனுசரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் சிலுவைப் பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த தினமான இன்று கிறிஸ்தவர்களால் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை பாரிஸில் உள்ள தூய அந்தோணியார் ஆலய திருத்தலத்தில் கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப் பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், தங்களுடைய தோளில் சிலுவையை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். அதனை தொடர்ந்து 14 ஸ்தலங்களில் ஜெப பாடல்ளுடன் சிறப்பு புனித வெள்ளி பிரார்த்தனை நடைபெற்றது. 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமைந்துள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருளப்பன் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு 14 சிலுவைப்பாதை நிலைகளையும், இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளையும் தியானம் செய்து அமைதி ஊர்வலமாக சென்றனர்.

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்ஸ்சிஸ் காலிஸ்ட் தலைமையில் சிலுவைப்பாதை ஊர்வலம் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப் பாதை ஊர்வலத்தில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். இதேபோல் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.




Night
Day