எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவைப் பாதை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது. முள் கிரீடம் தரித்து ரத்தம் சிந்திய படி சிலுவையை சுமந்து 14 தலங்கள் வழியாக இயேசுபிரான் சொரூபம் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு தளங்களிலும் பங்குத்தந்தை ரூபஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிலுவைப்பாதை பவனியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுபிரானை பிரார்த்தனை செய்தபடி சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டனர். அப்போது, இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்தபடி சென்றதையும், அவரை காவலர்கள் ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவதை செய்ததையும் தத்ரூபமாக சித்தரித்தனர்.
சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அரிசிபாளையத்தில் உள்ள புனித மேரி பள்ளியில் இருந்து இயேசு வேடமிட்ட ஒருவா் சிலுவையை சுமந்து வருவது போன்றும், அவரை காவலா்கள் அடித்து சித்ரவதை செய்வது போன்றும் ஊா்வலமாக குழந்தை இயேசு பேராலயத்துக்கு வந்தனா். ஊா்வலத்தில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் பாடல்களை பாடி ஊா்வலமாக வந்தனா்.
தர்மபுரி மாவட்டம் பாரதிபுரத்தில் உள்ள புதிய தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் முதன்மை குரு அருள்ராஜ் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு சிலுவை பாதை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு புதிய தூய இறுதி ஆண்டவர் பேராலயத்தில் இருந்து நான்கு ரோடு அருகே உள்ள பழைய இருதய ஆண்டவர் பேராலயம் வரை சென்றனர். இதனை தொடர்ந்து ஆராதனை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள புனித பத்தாம் பத்மநாதர் தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது. இயேசுவின் பாடுகள் குறித்து உணர்த்தும் வகையில் இந்த ஊர்வலம் அமைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் புனித தூய வியாகுல அன்னை பேராலயத்தில்
இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை கிறிஸ்தவா்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனா். பேராலய வளாகத்தில் மக்கள் சிலுவையை சுமந்தும் ஓசன்னா பாடல்களை பாடி தூய வியாகுல அன்னை ஆலயத்தின் உட்புறத்தில் சுற்றி வந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஏசு பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்று 14 இடங்களில் சிலுவையை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறுதியாக தேவாலயத்தை அடைந்த பின் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். சிலுவை பாதை நிகழ்வு மற்றும் சிறப்பு திருப்பலியினை பங்கு தந்தை பீட்டர் பால் நடத்தி வைத்தார். இன்றிரவு உயிர் நீத்த ஏசு பிரானுக்கு மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபடும் நிகழ்ச்சியும், நாளை இரவு ஏசு பிரான் மீண்டும் உயிர்த்தெழும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.