புரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தின் பிரசித்திபெற்ற பெருமாள் ஆலயங்களில் சிறப்ப வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதம் நம்பெருமாளுக்கு உகந் தமாதம் என்பதால் இம்மாதத்தின் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். அந்த வகையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சத்திய நாராயணா அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாள் சத்திய நாராயணா அலங்காரத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் வெங்கடாஜலபதி சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். முன்னதாக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் சிறப்பு மலர் அலங்காரத்திலும், உற்சவர் பொன்னப்பர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி மற்றும் தாயார் சன்னதியில் எள் மற்றும் நெய் விளக்கிட்டு வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை நகரில் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. முன்னதாக பூத நாராயண பெருமாளுக்கு 100 லிட்டர் பால் மற்றும் அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு துளசி மற்றும் பல வண்ண மலர் மாலை அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களின் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.



Night
Day