எழுத்தின் அளவு: அ+ அ- அ
மகாவீர் ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வடமாநிலத்தவர்கள் ஜெயின் கோயிலில் திரண்டு வழிபாடு நடத்தினர்.
எல்லா உயிர்களும் சமம் என்றும், சாதிக்கொடுமையை ஒழிக்க பாடுபட்டவரும், அன்பு, அறநெறி தத்துவங்களை உலகிற்கு போதித்தவருமான மகாவீரரின் பிறந்த நாள் விழா இன்று மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஈரோட்டில் உள்ள வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஜெயின் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, மகாவீரரின் சிலை மற்றும் அவரது திருஉருவப்படத்தினை அலங்கரித்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பக்தி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
திருச்சி குஜிலித் தெருவில் உள்ள ஜெயின் ஆலயத்தில் இன்று சமண சமயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகாவீரரின் தங்கச் சிலை மற்றும் திருவுருவப்படத்தினை நான்கு சக்கர வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஜெயின் ஆலயத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் சமண சமயத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி டவுன் கீழரத வீதியில் அமைந்துள்ள ஜெயின் கோயிலில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகாவீரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீரரின் படத்தை வைத்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர்.
இதே போன்று புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜெயின் கோயிலில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகாவீரர் சிலையுடன் தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வாத்தியங்களை இசைத்துக்கொண்டு, பஜனை பாடல்களை பாடியபடி நடனமாடி சென்றனர்.