எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், சித்திரை திருவிழாவின் போது போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். நீபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு முன்பாக இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், காவல்துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.