முருகன் கோயிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைப்பூச திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முருகன் மற்றும் சிவன் ஆலயங்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு பால், பழம், சந்தனம், கொண்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அரோகரா கோஷம் விண்ணை முட்ட சாமி தரிசனம் செய்தனர். 

பெரம்பலூர் மாவட்டம் வாலி கண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயிலில் பால தண்டாயுதபாணி சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் 7 அடி உயரத்தில் உள்ள  பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பூக்காரத் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்று கரையில் பூசத்துறையில் தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. திருவேங்கைவாசல் பெரியநாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர், சாந்தாரம்மன் சன்னதியில் இருந்து சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து சப்பரத்தில் எடுத்து வரப்பட்ட உற்சவ மூர்த்திகள் வெள்ளாற்று கரையில் தீர்த்தமாடும் வைபவம் நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட திரவிய பொருட்களால் முருக பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருக பெருமானை பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். முருகபெருமானின் 7வது படை வீடாக கருதப்படுவதும், அருணகிரி நாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த தலமான வயலூர் முருகன் ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் மற்றும் அலகு குத்தியும் முருக பெருமானை வழிபாடு செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குவிந்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் ரத்தினகிரி குமரக்கடவுள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரத்தினகிரி குமரக்கடவுளுக்கு 18 வகை திரவியம், 16 வகை பழங்களுடன் அபிஷேகம் நடந்தது. ரத்தினகிரி குமரக்கடவுளுக்கு சர்வ அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் பழனி ஆண்டவர் சுவாமி சன்னதியில் பழனி ஆண்டவருக்கு சிறப்பி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் மேலரத வீதியில்  மங்கள வாத்தியங்கள் இசைக்க, பல்வேறு சுவாமிகளின் வேடம் தரித்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் வீதி உலாவாக வந்து பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாவூற்று வேலப்பருக்கு வெள்ளி கவசம் மற்றும் வெள்ளி வேல் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவையொட்டி பால் குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பால சுப்பிரமணியர் கோவிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தங்கக் கவசத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லட்ச தீபம், பஞ்சதீபம் போன்ற பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Night
Day