முருகன் கோயில்களில் மாசி மக விழா மற்றும் குடமுழுக்கு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் மாசி மக விழா மற்றும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் உப கோயிலான ஒட்டன்சத்திரத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெரு விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்களின்  வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் பூஜைகள் நடைபெற்று மூலவர், விமானம், பரிவார  தெய்வங்களுக்கு புனித தீர்த்தங்கள்  ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் - கோவை சாலையில் உள்ள பாரதி நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக 4 கால யாக வேள்விகள் பெற்ற பின்னர் புனித  தீர்த்த கலசத்தை மேள தாளங்கள் முழங்க கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில்  மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான இன்று சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து, கோவில் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விழா நடைபெற்றது. 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடுகப்பட்டியில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.  முன்னதாக குளித்தலை கம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீதும் வாகனங்கள் மீதும் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. 

தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே காடந்தகுடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. 4 கால பூஜைகளுடன் கருடபகவான் வானத்தில் வட்டமிட கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகங்கள் நடத்தப்பட்டு,  கங்கை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கலசங்களில் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே புறங்காடு  கிராமத்தில் உள்ள  ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க  மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வரர் ஆலய தை மாத  பத்து நாள் ரதசப்தமி பிரம்மோற்சவத்தில் வேதபுரீஸ்வரர் உடன் 63  நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது.  63 நாயன்மார்களுக்குசிறப்பு பூஜைகள் செய்து பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் உடன் ,  16 சிறிய தேர்களில் 63 நாயன்மார்கள்  வீதிஉலா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Night
Day