முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா கோலாகலம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்...

அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

அறுபடை வீடுகளில் முருகனின் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அப்போது, திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து மேள, தாளத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இடுமன்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய பகவானை வணங்கியும், கைகளில் சூடம் ஏற்றியும் அரோகரா என்ற கோசத்துடன் முருகனை வழிபட்டு வருகின்றனர். மலைமேல் உள்ள முருகனை சுமார் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனமும் செய்து வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று மாலை நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக விளங்கும் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு, மூலவர் சுவாமிநாத சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பால்காவடி, புஷ்பகாவடி எடுத்து வந்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக தைப்பூச திருவிழா கொண்டாடி வருகின்றனர். மலைமேல் உள்ள முருகப்பெருமானை பல மணி நேரம் காத்திருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதே போல், தைப்பூசத்தை முன்னிட்டு முருகனின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையில் அதிகாலை முதலே குவிந்த ஏராளமான பக்தர்கள் முருகன் பாடல்களை பாடி பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் சமேத  சுப்பிரமணியசுவாமி சிம்மாசனத்தில் சாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Night
Day