லட்டு விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரிய நடிகர் கார்த்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பேசிய நடிகர் கார்த்திக்கிற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்த நிலையில், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார். 

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்புகள் கலக்கப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்து பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில், திரைத்துறையிலும் எதிரொலித்ததுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள 'மெய்யழகன்' திரைப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஹைதராபாத் சென்றிருந்தனர். அப்போது, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம், "லட்டு வேண்டுமா?" என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, "லட்டு இப்போது சென்சிடிவான விஷயம் என்றும் அதைப் பற்றி பேசாதீர்கள்" என்றும் சிரித்துக் கொண்டே கூற அங்கிருந்தவர்களும் கார்த்தியுடன் சேர்ந்து சிரித்தனர்.

இதனிடையே, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீதுர்கா மல்லேஸ்வரர் கோயிலில் 11 நாள் தீட்சை விரதத்தை மேற்கொள்ள வந்தார். அப்போது, நடிகர் கார்த்தி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருப்பதி லட்டு பற்றி சினிமா நிகழ்ச்சியில் கிண்டல் செய்வீர்களா என்றும், இது உணர்ச்சிவசமிக்க விஷயம் என்றும் கூறினார். நடிகர்கள் மீது தான் மரியாதை வைத்துள்ளதாக கூறிய அவர், சனாதன தர்மம் என வரும் போது, பேசும் வார்த்தையை ஒருமுறைக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும் என எச்சரித்தார்.

இதனையடுத்து, தான் பேசியது குறித்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பவன் கல்யாண் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டதற்கு, பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தற்செயலாக நடந்த விவகாரம் என்பதை தான் புரிந்து கொண்டதாகவும், திருப்பதி லட்டு விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வு பூர்வமான ஒன்று எனவும் கூறியுள்ளார். எனவே இது போன்ற விஷயங்களில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் எக்ஸ்தளத்தில் பதில் அளித்துள்ளார்.


Night
Day