வித்தியாரம்பம் நிகழ்ச்சி - ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்தும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 

கல்வியின் தெய்வமாக விளங்கும் சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி குழந்தைகளுக்கு கல்வி கற்றுதரும் நாளாக அமைந்துள்ளது. இதனிடையே நெல்லை சரஸ்வதி கோவிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இங்கு பச்சரிசியில் மஞ்சளால் அ ஆ என எழுதி கல்வியை தொடங்குவது வழக்கம். இந்த ஆலயத்தில் சரஸ்வதி ஏடு வைத்திருப்பதால் காலையிலிருந்தே ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து ஆரம்ப பள்ளி பாடத்தை கற்று தந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரர் கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில் தங்க ஊசியால் குழந்தைகளின் நாவில் எழுதி குருக்கள் கல்வியை தொடங்கி வைத்தார். சரஸ்வதி சன்னிதானத்தில் கோவில் குருக்கள் குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் எழுதியும், குழந்தைகளின் கை விரல்களை கொண்டு பச்சரிசியில் அகர முதல எழுத்துகளை எழுத செய்தும் கல்வியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் வருகை தந்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம் சார்பில் 65-ம் ஆண்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு ஓம் எனும் வார்த்தை எழுதப்பட்டும், பிஞ்சு விரல்களில் கை பிடித்து பச்சரிசியில் அ, ஆ என எழுதபட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. இரண்டரை வயது முதல் 6 வயது குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் எழுத்தறிவித்தல் நிகழ்வில் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Night
Day