எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரத்தில் 75 ஆண்டுகளாக மாரியம்மன் கோவிலை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகர பகுதியான பவர் ஹவுஸ் சாலையில் அமைந்துள்ள 75 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயிலில் அப்பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவில் விழுப்புரம் நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதால் கோவிலை அகற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி 75 ஆண்டுக்கால பழமையான மாரியம்மன் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக கோவிலில் இருந்த சாமி சிலைகள் பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.