எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்குச் சென்ற 3 பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் உள்ள சுயம்புசிவன் கோவிலுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில் சிலர் உடல்நலக்குறைவுடன் செல்வதால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் என்பவர், 4வது மலையில் நடந்து சென்றபோது, உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதல் மலையில் ஏறும்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் இருவரது உடல்களும் மலையடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று அதிகாலை நண்பர்களுடன் மலையேறிய தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் என்பவரும், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இதய கோளாறு, சுவாசக் கோளாறு, ரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.