எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோயிலில் நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோயிலில், ஆண்டுதோறும் கார்த்திகை 13ம் தேதி முதல் மார்கழி 30ஆம் தேதி வரை மகாதீபம் மற்றும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி, வனத்துறை அனுமதியுடன் நடத்தப்பட்டு வந்தது. நடப்பாண்டு பூஜை, தீபம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி கடந்த அக்டோபர் 29ம் தேதி விண்ணப்பித்தும் பரிசீலிக்கப்படவில்லை என்பதால், மனுவை பரிசீலித்து எதிர்காலத்திற்கும் சேர்த்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் பூஜை செய்ய காலை 10 மணி முதல் 3 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கோயிலுக்கு செல்லும் போது ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்றும் அவற்றுக்கு தீங்கு இழைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளோடு மாவட்ட வன அதிகாரி அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில், காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், குறித்த நேரத்திற்குள் மலையில் ஏறி, இறங்க முடியாது எனவும், கார்த்திகை தீபம் ஏற்ற கூடுதல் நேரம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்க வேண்டும் எனவும், நியாயமான அளவிலான விளக்கில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.