எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரம் அடி உயரம் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வருபவர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. வெள்ளிங்கிரி மலையில், மலையேற சென்றவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதால், மூச்சுத்திணறல், உடல் எடை பிரச்சனை, இதய பிரச்சனை இருப்பவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறை சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் பலசரக்கு கடை நடத்தி வரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவா என்பவர், உறவினர்கள், நண்பர்களுடன் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். ஏழாவது மலைக்குச் சென்று சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு முதல் மலைக்கு வந்து கொண்டிருந்த போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிவா மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆலாந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிவாவுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருதய பிரச்சினை காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.