எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு நீல நிற சிவப்பு நிற பட்டாடை உடுத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாநகராட்சியில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பூக்குடலை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனாகிய ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி எறிபத்த நாயனார் பூக்குடலைத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிவபெருமானை நினைத்து ருத்ராட்ச மாலைகள் அணிந்து விரதத்தை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இராம கொண்ட அள்ளியில் உள்ள சங்கடஹர கணபதி ஆலயத்தில் மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. சங்கடஹர கணபதிக்கு 18 வகையான திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அழகர்கோவில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் பாலாலய பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் 108 சிறிய கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு நூபுர கங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. மேள தாளம் முழங்க மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை அருகே மலைக்குடிபட்டியில் உள்ள மாதவாராகியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காக 500க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குகள் ஏற்றி கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் ஏழை மாரியம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு மாரியம்மன் வராகி அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு ஏழை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பல வண்ண மலர்களால் ஆன சந்தன காப்பில் வராகி அம்மன் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புதுச்சேரியில் புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி முத்து பல்லக்கு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துபல்லக்கு வாகனத்தில் விநாயக பெருமான் எழுந்தருள திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வழிபட்டனர்.