திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தைத்தேர் உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தைத்தேர் உற்சவம் கடந்த 2ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி நம்பெருமாள் பல்வேறுவாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்த நிலையில், உற்சவத்தின் 8-ம் நாளான இன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு திருவீதிஉலா நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம் பெருமாளை ரங்கா, ரங்கா என பக்தி கோஷமிட்டவாறு தரிசித்தனர்.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நான்கு உத்தர வீதிகளிலும் வலம் வந்த தேரை பெரும் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.