எழுத்தின் அளவு: அ+ அ- அ
குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு, 1008 கிலோ ஆட்டுக்கறி சமைத்து சுடச்சுட விருந்தளிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் ருசித்துச் சென்றனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கருப்பண்ணசாமி வன்னி குலசாமி கோயில் அமைந்துள்ளது.
இங்குள்ள தேவதைகளுக்கு 17ம் ஆண்டு மாசி களரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. களைக்கட்டிய திருவிழாவில், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்திக்கடனை செலுத்தினர்.
திருவிழாவை யொட்டி, குல தெய்வத்திற்கு நேர்த்திக்கடனாக 51 கிடாய்களைப் பலியிட்டு வழிபட்ட பக்தர்களுக்கு சுடச்சுட ஆட்டுகறி விருந்து அளிக்கப்பட்டது.
இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, 1008 கிலோ ஆட்டுக்கறியை சமைத்து, பந்தி போட்டு தலை வாழை இலையில் சுடச்சுட விருந்தளிக்கப்பட்டது.
இதில், கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சாத்தூர், முதுகுளத்தூர், கடலாடி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பக்தர்கள் கலந்து கொண்டு கறி விருந்தை வெளுத்து கட்டினர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று, ஆட்டுக்கறி விருந்தை ருசித்து சென்றனர்.
மேலும், கூட்டம் அலைமோதியதால் பக்தர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கட்டுப்படுத்தி வரிசையாக அனுப்பி வைத்தனர்.