நாட்டின் ஜனநாயக மரபுகளை சிதைத்து, தேசத்தை சிறையில் தள்ளிய நாள் என்று, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். தனது தோல்வியை மறைக்கவே பிரதமர் மோடி கடந்த காலத்தை தோண்டிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனம் செய்து இன்றுடன் 50 ஆண்டுகளாகிறது. இதுகுறித்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அவசரநிலையை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், மகளிருக்கும் மரியாதை செலுத்தும் நாள் இது என்று கூறியுள்ளார். ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெரிதும் மதிக்கும், அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் கட்சி எவ்வாறு அடியோடு தகர்த்தது என்பதை நினைவூட்டும் நாள் இது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜனநாயக கொள்கைகளை சிதைத்து, காங்கிரஸ் கட்சி தேசத்தை சிறையில் அடைத்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஒத்துப்போகாதவர்கள் அனைவரும் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக, கடந்த காலத்தை பிரதமர் மோடி தோண்டிக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக 140 கோடி மக்களால் உணரப்பட்ட அறிவிக்கப்படாத அவசரநிலையால் ஜனநாயகத்தின் மீது பேரடி விழுந்ததுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ஒருமித்த கருத்து, ஒத்துழைப்பு பற்றி பேசிவரும் மோடியின் செயல்பாடுகள் அதற்கு எதிர்மறையாக இருப்பதாகவும் கார்கே விமர்சித்துள்ளார்.