எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொருந்தாக் காதலில் ஈடுபட்ட முதியவரும், இளம் பெண்ணும் ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். கண்ணை மறைத்த முறையற்ற உறவு, இரண்டு உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. 50க்கும் 18க்கும் ஏற்பட்ட பொருந்தா உறவு விபரீதத்தில் முடிந்ததை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு ...
மகள் வயது இளம் பெண்ணுடன் முதியவருக்கு ஏற்பட்ட பொருந்தா காதல் முடிவுக்கு வந்த இடம் தான் இது....
சாத்தியமில்லை, இது நடக்கவே நடக்காது, வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும், அதையும் மீறி நடக்கும் தவறுகளில் முறையற்றக்காதல், பொருந்தாக் காதல் போன்றவை அடங்கும். இதனால் ஏற்படப் போகும் இழப்புகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறிதும் யோசித்துப் பார்ப்பதில்லை. இது விபரீதத்தில் தான் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் கொரட்டகர பஞ்சாயத்துக்குட்பட்ட கோலாலா அருகே லக்கய்யபாளையா கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி அனன்யா. படிக்க வேண்டிய பருவத்தில் திசைமாறிய அனன்யாவுக்கு பைரகொண்டலு கிராமத்தை சேர்ந்த 50 வயது ரங்கசாமண்ணா என்பவருடன் பொருந்தா காதல் ஏற்பட்டுள்ளது.
ரங்கசாமண்ணா ஏற்கனவே திருமணமானவர். காதலுக்கு கண்ணில்லை என்பதால், வயதைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்த விவகாரம் அனன்யாவின் வீட்டுக்கு தெரியவர வெடித்தது பிரச்னை. கடும் எதிர்ப்பு தெரிவித்த அனன்யாவின் பெற்றோர், மகளை கண்டித்துப் பார்த்தனர். திருந்துவதாக இல்லை என்று தெரிந்த அவர்கள் ஒரு கட்டத்தில் பொறுமையாக, பக்குவமாக புத்திமதியும் கூறியுள்ளனர். இதற்கும் அசைந்து கொடுக்காத அனன்யா, ரங்கசாமண்ணாவை திருமணம் செய்யும் அளவுக்கு எல்லை மீறிப் போனதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்த அனன்யா, 3 நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். மகளின் நிலை தெரியாததால் பதறிப் போய் பல இடங்களில் தேடி அலைந்தும் எந்த பயனும் இல்லாததால், காவல்துறையின் உதவியை நாடினர் அனன்யாவின் பெற்றோர்.
தேடுதல் வேட்டையை முடுக்கி விட்ட காவல்துறை, இருவரின் செல்போன்களையும் வைத்து அவர்கள் இருப்பிடத்தை கண்டறிய முயற்சி செய்தனர். இதன் பலனாக கொரட்டகரேயில் உள்ள மாவத்தூ ஏரி அருகே அனன்யாவும், ரங்கசாமண்ணாவும் சென்ற கார் நிற்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
உடனடியாக அங்கு சென்ற போலீசார் ஏரிக் கரையில் இருவருடைய செருப்புகளும் இருப்பதை பார்த்தனர். சந்தேகத்தின் பேரில் ஏரியில் தீயணைப்புத் துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டையில் தீயணைப்புத் துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர். பொருந்தா காதல் கைகூடாது என்ற முடிவுக்கு வந்த அனன்யாவும், ரங்கசாமண்ணாவும் கரையில் காரை நிறுத்திவிட்டு. செல்போன்களை உள்ளே வைத்துவிட்டு ஏரியில் தற்கொலை செய்த கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 50 வயது முதியவரும், அவருடன் காதலில் விழுந்த 18 வயது கல்லுாரி மாணவியும். கடைசியில் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.