'கூட்டணி தர்மப்படி சிறப்பான ஆட்சியை அளிப்போம்' - பிரதமர் மோடி உறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

கூட்டணி தர்மபடி சிறப்பான ஆட்சியை அளிப்போம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் வரிசையில் அமரவே, இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  பழைய நாடாளுமன்ற மைய வளாகத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தன்னை என்டிஏ நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். வெற்றி பெற்ற பாஜக கூட்டணி எம்பிக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், இரவும் பகலாக அயராது உழைத்த அனைத்து கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் முன் தலைவணங்குவதாக தெரிவித்தார். நாடு முழுவதும் 22 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 7ல் என்.டி.ஏ. கூட்டணிக்கு அதிக ஆதரவுகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார். நாட்டின் வளர்ச்சியில் ஒருபோது சமரசம் இல்லை, தேசமே முதன்மையானது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். 

தேர்தலுக்கு முன்பே உருவான கூட்டணி வெற்றிகரமாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை என்றும், என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை வலிமையானது எனவும் அவர் தெரிவித்தார். 30 ஆண்டுகளில் தற்போது அமைந்துள்ள என்.டி.ஏ. கூட்டணிதான் வலிமையானது எனவும், வாஜ்பாய், ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ், பால் தாக்கரே ஆகியோர் என்.டி.ஏ. கூட்டணிக்கு வித்திட்டதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார். கூட்டணி தர்மபடி சிறப்பான ஆட்சியை அளிப்போம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார். 

தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் கிடைக்காத போதும் பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். வருங்காலங்களில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது கண்கூடாகத் தெரிவதாகவும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி சரியான பாதையில் செல்வதை தமிழகத்தில் கிடைத்துள்ள வாக்குகள் காட்டுவதாகவும் தெரிவித்தார். 

சிறந்த நிர்வாகத்திற்கு சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் உதாரணம் என்றும், மத்திய - மாநில அரசுகளின் தேவைகளுக்கு இடையே கருத்து வேற்றுமைக் இருக்க கூடாது என அவர் தெரிவித்தார். அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து தான் அவசியம், பெரும்பான்மை அல்ல என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

மின்னணு வாக்கு இயந்திரங்களை சந்தேகப்பட்டவர்கள் தற்போது அமைதியாகிவிட்டனர் என்றும், வாக்கு இயந்திர விஷயத்தில் காங்கிரஸ் 100 ஆண்டு பழைய சிந்தனையுடன் செயல்படுவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். 

ஜனநாயகத்தின் தாய் இந்தியா என பாஜக கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியோ ஜனநாயகம் செத்துவிட்டதாக விமர்சிப்பதாக மோடி தெரிவித்தார். தாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன என்றும், தாங்கள் தோற்கவும் இல்லை, தோற்கவும் மாட்டோம் எனவும் பிரதமர் மோடி சூளுரைத்தார். 

10 ஆண்டுகள் ஆகியும் காங்கிரசால் 100 இடங்களில் கூட வெற்றிபெற முடியவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் வரிசையில் அமரவே, இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளதாகவும் பிரதமர் விமர்சித்தார்.

Night
Day