அசாம் வெள்ளம் - இதுவரை 35 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் சிக்கிமில் கடும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் மட்டும் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 28 ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. 15 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக, கரீம்கஞ்ச் மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. அம்மாவட்டத்தில் மட்டும், 1 லட்சத்து 52 ஆயிரத்து 133 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, கரீம்கஞ்ச் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று சிறார்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஹைல்கண்டி பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இதனை அடுத்து மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் ஆயிரத்து 378 ஹெக்டர் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், 54 ஆயிரத்து 877 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்து 114 பொது மக்கள் வெளியேற்றப்பட்டு, 43 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 24 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 470 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, பல மாவட்டங்களில் வெள்ள நீரில் கரைகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது.

Night
Day