எழுத்தின் அளவு: அ+ அ- அ
அசாமில் கனமழை வெள்ளத்தால் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வட கிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அசாம் மாநிலம் கனமழை, வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தின் கம்ரூப், கோலாகாட், மஜூலி உள்ளிட்ட 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெள்ளம் காரணமாக இதுவரை 45க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு பராமரிக்கப்பட்டு வந்த மான், நீர்யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பூங்காவை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அருகிலுள்ள மலைகளிலும், குன்றுகளிலும் விலங்குகள் தஞ்சமடைந்துள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், நிலைமை மேலும் மோசமடை வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.