எழுத்தின் அளவு: அ+ அ- அ
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரச் சின்னத்தை அஜித் பவர்பயன்படுத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய வாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்த போது 40 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு அஜித் பவர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளித்தார். கட்சி இரண்டாக உடைந்த பிறகு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னம், கொடி உள்ளிட்டவற்றை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அஜித் பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். இதேபோல் சரத் பவர் அணி தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சின்னம், கொடி உள்ளிட்டவை அஜித் பவர் அணிக்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத் பவர் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடிகாரச் சின்னத்தை அஜித் பவர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதிலும் தேர்தல் பிரச்சார போஸ்டர், விளம்பரப் பலகை உள்ளிட்டவையில் சின்னத்தை பயன்படுத்தும் போது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என நிபந்தனை விதித்தது.
இதன்பிறகு தற்காலிக சின்னத்துடன் மக்களவைத் தேர்தலில் சரத் பவர் அணி போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித் பவர் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மீறி விளம்பர பலகைகளில் வாசகங்களை சேர்க்கவில்லை எனவும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய சின்னத்தை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட அஜித் பவருக்கு உத்தரவிடக்கோரி இடையீட்டு மனுவை சரத் பவர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் சூர்ய காந்த் , திபங்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சரத் பவர் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரு தரப்புக்கும் சங்கடம் ஏற்படாமல் இருக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர். நீதிமன்ற உத்தரவுகளை இரு தரப்பும் மீற மாட்டோம் எனன்ற உறுதி மொழி பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.