எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள தேவஸ்தான நிர்வாகம், உயிரிழந்தவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்வை காண, இலவச தரிசன டோக்கனை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் படுகாயம் அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த ஆந்திர அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். மேலும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சத்ய பிரசாத் அறிவித்தார். இதனிடையே திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அறங்காவலர் குழு தலைவர், மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக கடிந்துக் கொண்டார்.