ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் முதல் அமலுக்கு வந்தன.
INDIAN PENAL CODE ஐ.பி.சி. எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட ஆங்கிலேயர் காலத்து பழைய சட்டங்களுக்கு சட்டங்களுக்கு பதிலாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்திய தண்டனை சட்டத்துக்கு மாற்றாக பி.என்.எஸ். எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறை சட்டத்துக்குப் பதிலாக பி.என்.எஸ்.எஸ் எனப்படும் பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, இந்திய ஆதார சட்டத்துக்கு மாற்றாக பாரதிய சாட்சியா என்பதே மத்திய அரசு உருவாக்கிய அந்த 3 புதிய சட்டங்கள் ஆகும்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது, எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய மசோதாக்கள், குடியரசு தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் அரசிதழில் வெளியிடப்பட்டது.
எதிர்க்கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று அமலுக்கு வந்தன. புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததை அடுத்து, அதிகாரிகளை தயார்படுத்தும் வகையில், நாடு முழுவதும் போலீசார், நீதித்துறையை சேர்ந்த அதிகாரிகள், தடயவியல் துறையினர் என 40 லட்சம் பேருக்கு புதிய சட்டங்கள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்த புதிய சட்டங்கள் மூலம், இனி காவல் நிலையத்திற்கு சென்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆன்லைனில் புகார் அளிக்க முடியும், எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம், பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 45 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வழங்க வழிவகுப்பது போன்றவை புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்களாகும்.