அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு - பிரதமர் மோடி முன்னிலையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

500 ஆண்டு கால வரலாற்று சிறப்பு வாய்ந்த அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர ​மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து முதல் மகா தீபாராதணையை காண்பித்து வழிபட்டார். 

உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் ராமர்  கோயில் கட்டும் பணிகள் தொடங்கின. சுமார் 2 புள்ளி 7 ஏக்கர் பரப்பளவில், 392 தூண்கள், 44 கதவுகள், ​சிற்பக்‍கலைகள் என 3 அடுக்‍கில் வட இந்திய நாகரா பாணியில் ராமர் கோயில் கட்டப்பட்டது.  சுமார் 2000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில வாரங்களாகவே அயோத்தி நகரம் விழாக்‍கோலம் பூண்டிருந்தது. இந்தநிலையில் முக்‍கிய நிகழ்வான இன்று அதிகாலை முதலே 50 இசைக்‍கருவிகள் கொண்டு  மங்கள இசை நிகழ்ச்சி தொடங்கியது. பிரபல பாடகர்கள் சங்கர் மகாதேவன், சோனு நிகம் உள்ளிட்டோர் ராமர் பக்‍திப் பாடல்களை பாடி பக்‍தர்களை பரவசப்படுத்தினர். 

ராமர் ​சிலை பிரதிஷ்டைக்‍காக 11 நாட்கள் கடும் விரதம் இருந்த பிரதமர் மோடி, 
காலை 10.25 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அயோத்திக்கு வந்தார். அங்கிருந்து விழா நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர், சரியாக 10.55 மணிக்கு ராமர் கோயில் இருக்கும் இடத்தை அடைந்தார். தொடர்ந்து, காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயிலை சுற்றி பார்த்தார். 

பின்னர் சரியாக நண்பகல் 12.05 மணிக்கு கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளை தொடங்கி வைக்‍க பிரதமர், தங்கநிற ஆடையில், கையில் ராமருக்‍கான சீர்வரிசையை ஏந்தியபடி கோயிலுக்‍கு வந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் எழுந்து​நின்று பிரதமருக்‍கு வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க சிறப்பு பூஜையில் பிரதமர் கலந்துகொண்டார். அவருடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றனர். பின்னர் பிரதமர் அளித்த தங்க குச்சியை கொண்டு குழந்தை ராமரின் கண்கள் திறந்து வைக்கப்பட்டன. 

வெறும் 84 வினாடிகள் இந்த நிகழ்வு நடைபெற்றது. 108 விளக்குகள் ஏற்றப்பட்டு 5 அடி உயரமுடைய குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. கோயில் கருவறையில் தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிக்‍கப்பட்டு ஜொலித்த பால ராமர் சிலைக்‍கு மலர்​தூவி பிரதமர் வழிபாடு நடத்தினார். பின்னர், பால ராமருக்கு முதல் தீபாராதனை மற்றும் முதல் பூஜையை செய்து பிரதமர் மனமுருக பிரார்த்தனை செய்தார்.

பால ராமர் சிலை திறக்‍கப்பட்ட அதே சமயம் ஹெலிகாப்டர்  மூலம் கோயில் வளாகத்தில் மலர்கள் தூவப்பட்டன. அங்கு திரண்டிருந்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்‍கம் எழுப்பி பக்‍தியை வெளிப்படுத்தினர்.  

ராமர் கோயில் பிரதிஷ்டையின்போது சிறிய கண்ணாடியையும் பிரதமர் பரிசாக அளித்தார். இதைத்தொடர்ந்து ராமர் கோவில் கட்டிய தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் பிற்பகல் கோவிலின் தெற்குப்பகுதியில் உள்ள பழங்கால மண்டபமான பகவான் சிவனின் சிலையுள்ள குபேர் திலாவுக்குச் சென்று, ​பிரார்த்தனை செய்தார். 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், நாளை முதல் பக்தர்கள்​தரிசிக்கலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம் என்றும் காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Night
Day