அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திர விவரங்கள் : நாளைக்குள் தாக்கல் செய்ய ஆணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், கால அவகாசம் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது.

Roll Visual
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கடந்த மாதம் 15-ம் தேதி ரத்து செய்த உச்சநீதிமன்றம், 2019 ஏப்ரல் 12-ம் தேதியிலிருந்து தற்போது வரை, தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட அனைத்து பங்களிப்பு விவரங்களையும், எஸ்.பி.ஐ வங்கி மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இந்த அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி எஸ்.பி.ஐ தரப்பில் கடந்த 4-ம் தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வெளியிடாமல் இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காககவும் எஸ்பிஐ வங்கி மீது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்களை தொகுக்க வேண்டும் என்றும், நடைமுறை சிக்கல்களால் நன்கொடையாளர்கள் விவரங்களை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் தேவை எனவும் எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் வாதிடப்பட்டது. 

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் பத்திரங்களின் விவரங்களைத் தான் தாக்கல் செய்ய உத்தரவிட்டோமே தவிர, தரவுகளை சரிபார்க்க சொல்லவில்லை என காட்டமாக தெரிவித்தனர்.

26 நாட்களாக பாரத ஸ்டேட் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இவ்வளவு நாட்களில் குறைந்தபட்சம் 5,000 அல்லது பத்தாயிரம் தேர்தல் பத்திர தரவுகளை அளித்திருக்கலாமே என தெரிவித்தனர். 

நாட்டிலேயே பெரிய வங்கியான எஸ்.பி.ஐ-யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா எனவும், தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

தேர்தல் பத்திர விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கியிடம் சிறிது நேர்மையை எதிர்பார்ப்பதாக கூறிய நீதிபதிகள், கடந்த ஒருமாதமாக எஸ்.பி.ஐ. வங்கி எதுவும் செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். 

நடைமுறை பிரச்சனைகளை கூறிக்கொண்டு இருக்காமல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கியை நீதிபதிகள் கடிந்து கொண்டனர். 

தொடர்ந்து, 3 வாரம் அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யுமாறு எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டனர். 

எஸ்.பி.ஐ வங்கியிடம் தகவல்களை பெற்று வரும் மார்ச் 15-க்குள் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர். 

Night
Day