எழுத்தின் அளவு: அ+ அ- அ
நான்கு நாட்கள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்க துணை அதிபர் தனது மனைவி உஷா வான்ஸ், தனது 3 குழந்தைகளுடன் கடந்த திங்களன்று டெல்லி வந்தார். பாலம் விமான நிலையத்தில் அமெரிக்க துணை அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வது மற்றும் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஜேடி வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவுக்குச் சென்றனர். புகழ்பெற்ற அமர் அரண்மனைக்குச் சென்றதுடன் ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெற்ற அமெரிக்க-இந்தியா வணிக உச்சி மாநாட்டில் பங்கேற்று வான்ஸ் உரை நிகழ்த்தினார். நேற்று தாஜ்மகாலை பார்வையிட ஆக்ரா சென்றுவிட்டு ஜெய்ப்பூருக்குத் திரும்பி ஜெய்ப்பூர் நகர அரண்மனையைப் பார்வையிட்டார். இந்தநிலையில், தனது 4 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு ஜெய்ப்பூரில் இருந்து வான்ஸ் அமெரிக்கா புறப்பட்டார்.