எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஆந்திராவில் பிரகாசம், நெல்லூர், சித்தூர், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கன மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கடப்பா நகரில் பெய்த கன மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
திருப்பதி மாவட்டத்தில் கொட்டிய கன மழையால் ரேணிகுண்டா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. கன மழை காரணமாக திருப்பதி - திருமலை மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து பெரிய பாறாங்கற்கள் சரிந்து சாலையில் விழுந்தன. அந்த சமயத்தில் எந்த வாகனங்களும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.
கன மழை பெய்துவரும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது ஆந்திராவில் மீண்டும் கனமழை கொட்டி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.