ஆந்திரா, தெலங்கானாவில் கனமழைக்கு இதுவரை 27 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இரு மாநிலங்களிலும் அதி கன மழை முதல் மிகஅதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் அருகே ஞாயிற்றுக் கிழமை கரையைக் கடந்தது. இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கன மழை பெய்தது. இரு மாநிலங்களிலும் பல பகுதிகளில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள புடமேரு வாகு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டன. குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். 

விஜயவாடாவில் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் இடுப்பளவுக்கு மேல் தேங்கியுள்ள தண்ணீரில் தத்தளித்தபடி மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதனிடையே ஆந்திராவில் வெள்ள பாதிப்புகள் குறித்து, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ரப்பர் படகில் சென்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

கன மழையால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாலும், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதாலும் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இதனிடையே வெள்ள பாதிப்பு குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இதனிடையே, ஆந்திராவில் பெய்த கன மழையால் விஜயவாடா, குண்டூர் நகரங்களை வெள்ள நீர் முற்றிலும் சூழ்ந்துள்ளது. விஜயவாடா - குண்டூர், விஜயவாடா - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கன மழையால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் பேர் 107 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்மம் மாவட்டத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், மக்கள் வீடுகளுக்கு மேல் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 26 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மொத்தம் 140 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 12 ரயில்கள் முழுமையாக ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 ரயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனிடையே ஆந்திரா, தெலுங்கானாவில் கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.


Night
Day