ஆந்திரா : முதலமைச்சர் மீது கல்வீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவின் விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.

ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, தனது கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன் மோகன் ரெட்டி காயமடைந்தார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு பேருந்தில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த கல்வீச்சு தாக்குதலில் முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையை நிறுத்தாமல் தொடர்ந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாநில முதலமைச்சர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day