எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவியேற்று கொண்டார். இவரக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மட்டும் தனித்து 164 இடங்களை வென்றது. இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கேசரப்பள்ளியில் இன்று பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், சந்திரபாபு நாயுடு 4வது முறை முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அத்துடன், துணை முதல்வராக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பதவி ஏற்றார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். முதலமைச்சராக பதவியேற்று கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, பிரதமர் மோடி மலர் கொத்து வழங்கி ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் தனது அண்ணன் நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த விழாவில், பிரதமர் மோடி உட்பட உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.