ஆந்திர முதலமைச்சராக 4-வது முறையாக இன்று பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மக்களவையுடன் சேர்த்து, 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திர சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்தும், தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கட்சிகள் கூட்டணி வைத்தும் தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க் கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. தேர்தல் வெற்றியை அடுத்து விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுடன் ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை அடுத்து, ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக இன்று பதவியேற்கிறார். 

விஜயவாடா அருகே ஞானாவரம் விமான நிலையத்தை அடுத்த கேசரப்பள்ளி மைதானத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் விழாவில் ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். துணை முதலமைச்சராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் ஜனசேனா கட்சிக்கு மூன்று இடங்களும், பாஜகவுக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

varient
Night
Day