எழுத்தின் அளவு: அ+ அ- அ
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார். இதை தொடர்ந்து, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பதவியேற்றார்.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் தெலங்கான ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளதால், வரும் மக்களவை தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவின் மருத்துவப் பிரிவு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர், தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தூத்துக்குடி தொகுதியில் திமுகவை சேர்ந்த கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.