எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 104 பேர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு வந்தடைந்தனர். அமெரிக்காவில் இருந்து சி-17 என்ற ராணுவ விமானத்தில் இந்தியா திரும்பியபோது தங்களது கைகளில் கைவிலங்கு மற்றும் கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக இந்தியர்கள் குற்றம்சாட்டினர். அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகே கை மற்றும் கால்களில் பூட்டப்பட்ட சங்கிலி அகற்றப்பட்டது என்றும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியர்களுக்கு கைவிலங்கிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி எம்,.பி.க்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற செயல் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. இதில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, பின்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.