எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் தீவிரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தாக்குதலுக்கு உதவியதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே, ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றங்கள் அனுமதி அளித்தன.
இந்த நிலையில் இந்தியாவில் சித்ரவதைக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக கூறி தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு தடை விதிக்க கோரி, தஹாவூர் ராணா தரப்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் என கூறப்படுகிறது.