இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியேற்றார் யாஷ்வினி தாஹா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட கோர ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் குல்தீப் உயிரிழந்த நிலையில், அவர் விட்டு சென்ற பணியை தொடர அவரது மனைவி யாஷ்வினி தாகா ராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார். 

141 கோடி இந்திய மக்களின் பாதுகாப்பிற்காக வெயில், மழை, புயல் என எதையும் பொருத்படுத்தாமல் எண்ணற்ற ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். பல நேரங்களில் அவர்கள் உயிர்த்தியாகமும் செய்து வருகின்றனர். அந்த வகையில், முப்படைகளின் தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 தேதி கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணித்து கொண்டிருந்தபோது, ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தக் கோர விபத்தில் அந்த விமானத்தை இயக்கிய பைலட் குல்தீப் சிங்கும் உயிரிழந்தார். அவரது இழப்பு குடும்பத்தார் இடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால், கணவர் உயிரிழந்ததால் மனம் உடைந்து விடாத குல்தீப் சிங்கின் மனைவி யாஸ்வினி தாஹா, தேசத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், தனது கணவர் விட்டுச்சென்ற பணியை தொடர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் அயராது உழைத்து, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை பெற்று முத்திரைப் பதித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு குல்தீப் சிங்குடன் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், 2021 ஆண்டு நடந்த கோர விபத்து ஆசிரியராக பயணத்தை தொடர இருந்த யாஷ்வினி தாஹாவின் பாதையை தேசத்தின் பக்கம் திருப்பியது. கணவனை இழந்த யாஸ்மின் தாஹா, அவரது கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக SSC எனப்படும் குறுகிய கால சேவைக்கான பணிக்கு தொடந்து முயற்சி செய்தார். ஐந்து முறை முயன்றும் முடியாத நிலையில், ஆறாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றார். இதனைத் தொடர்நது, சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், சனிக்கிழமை ராணுவ துணைத் தளபதி ராம் சுப்ரமணி முன்னிலையில், லெப்டினன்ட் பதவியை ஏற்றுக்கொண்டார்.

லெப்டினன்ட் பதவி ஏற்றுக்கொண்ட யாஷ்வினி தாஹா, தமிழ்நாட்டிற்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், தனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தொடர்புடையதாகவே இருப்பதாகவும் உருக்கத்துடன் தெரிவித்தார்.

Night
Day