எழுத்தின் அளவு: அ+ அ- அ
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலான தேசிய ஜனநாய கூட்டணி எம்.பி.க்கள் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தனர்.