எழுத்தின் அளவு: அ+ அ- அ
செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் இஸ்ரோ, அதே வரிசையில் பிஎஸ்எல்வி-C 60 ராக்கெட்டை இன்று இரவு விண்ணில் செலுத்த உள்ளது. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
உலக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்து வருகிறது. வணிக ரீதியாக செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி தொடர்ந்து வெளிநாடுகளுக்கு உதவிகரமாய் உள்ள இஸ்ரோ, அதே நேரத்தில் உலக சந்தையில் முன்னணி அமைப்பாகவும் திகழ்கிறது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நோக்கில் கனவு திட்டமாக ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தை நிறுவ வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றி வரும் இஸ்ரோ, அதன் ஒரு பகுதியாகதான் கடந்த ஆண்டு சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 என பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த நிலையில் 30ம் தேதி இரவு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. இதற்கான ஸ்பே டெக்ஸ்-ஏ, ஸ்பே டெக்ஸ்-பி' என தலா 220 கிலோ எடை கொண்ட, 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.
பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ், இரு தனித்தனி விண்கலங்களை விண்வெளியில் இணைக்கும் டாக்கிங் எனப்படும் தொழில்நுட்பத்தை சோதிக்கிறது.
இது வெற்றிகரமாக முடிந்தால் இந்த சாதனையை அடையும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்கின்றனர் விஞ்ஞானிகள். சுமார் 50 நாட்களுக்கு மேலாக இந்தத் திட்டத்தை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் நடைபெற்று தற்போது ராக்கெட்டை ஏவுதலத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து பல முயற்சிகளால் விண்வெளியில் வெற்றியை நிலைநாட்டி வரும் இந்தியா தற்போது இந்த திட்டத்தையும் தங்களின் அயராத முயற்சியால் உருவாக்கியுள்ளனர். அதற்கு பலன் அளிக்கும் வகையில் இந்த திட்டம் வெற்றி பெற்றால் உலக விண்வெளி ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நாடாக இந்தியா இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.