இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில், ஒரு தொகுதியில் மட்டுமே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகம், பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

அதன்படி, மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

இமாசலப்பிரதேசத்தில் டேஹ்ரா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர், 9 ஆயிரத்து 399 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். மேலும், நலகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஹமிர்பூர் தொகுதியில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன.

பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. 

உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்களூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இதில், இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

இதேபோல் பீகாரில் ரூபாலி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளரை சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் பின்னுக்கு தள்ளியுள்ளார். 

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக முன்னிலை வகிக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

Night
Day