இமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹிமாச்சல பிரதேச மாநிலங்களவை தேர்தலில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களித்த நிலையில், அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங்கின் மகனான விக்ரமாதித்ய சிங் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

இமாச்சல பிரதசத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க.வின் ஹர்ஷ் மஹாஜனுக்கு வாக்களித்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இதனால் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி தோல்வியை தழுவினார்.

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவிய நிலையில் மைனாரிட்டி அரசான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது. 

மாநில ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்திக்க உள்ள எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வின் ஜெய்ராம் தாக்கூர், முதல்வர் சுகுவை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பை வலியுறுத்தி மாநில சபாநாயகர் அறையில் அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள் 15 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனிடையே சி.ஆர்.பி.எஃப். மற்றும் ஹரியானா போலீசாரால் தங்கள் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள், அரியானாவுக்கு கடத்தப்பட்டதாக முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த அதிர்ச்சியாக இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனும், மாநில  அமைச்சருமான விக்ரமாதிய சிங், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் அணியை சேர்ந்த 26 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் சுக்வீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறும் நிலையில், விரைவில் காங்கிரஸ் அரசு கவிழும் என கூறப்படுகிறது.

Night
Day