உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய புறப்பட்டார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று புறப்பட்டுச் சென்றார். முதற்கட்டமாக ரஷ்யா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்தியா, ரஷ்யா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, மாஸ்கோவில் நடைபெறும் இரு நாடுகளுக்கு இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று மாஸ்கோ புறப்பட்டுச் சென்றார். இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அதிபர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு நாளை செல்லும் பிரதமர் மோடி, 10ம் தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது அங்குள்ள தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார். கடந்த 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். 

இந்த 3 நாள் பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, ரஷ்யா இடையே அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து நண்பர்  புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார். ஆஸ்திரியா பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

varient
Night
Day