உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வாக்களிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

57 தொகுதிகளில் நடைபெறும் 7-வது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்டத் தேர்தல் இன்று விறுவிறுxப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கினை செலுத்தினார். கோரக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் ரவி கிஷன், சமாஜ்வாதி கட்சி சார்பில் காஜல் நிஷாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜாவேத் அஷ்ரப் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சங்ரூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தனது மனைவியுடன் சென்று வாக்கினை செலுத்தினார். சங்ரூர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் சுக்பால் சிங் கைரா, பாஜக சார்பில் அரவிந்த் கன்னா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் வாக்களித்து நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

பீகார் மாநிலத்தில் 8 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் ராஜ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமை ஆற்றினார். 

இமாச்சலப்பிரதேசத்தில் 4 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஹமிர்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது மனைவியுடன் சென்று ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஏராளமான பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களிக்க வருகை தந்துள்ளதாகவும், மேலும் பொதுமக்கள் ஜனநாயக திருவிழாவை கொண்டாடுவதாகவும் தெரிவித்தார்.

இமாச்சலப்பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். இதேபோல், இன்றைய இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறை, விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர்.



Night
Day