எழுத்தின் அளவு: அ+ அ- அ
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகர் வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை துண்டிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், வெளிஆட்கள் வன்முறை நடந்த பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்பட்ட இடத்தில் இந்து கோயில் இருந்ததால், அந்த இடத்தில் ஆய்வு நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி,மசூதியில் 2ம் கட்ட ஆய்வு நடத்த தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் இடையே அப்போது மோதல் வெடித்தது. மோதலின்போது, போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்த கலவரத்தில் நவ்மான், பிலால், நயீம், முகமது கைஃப் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து சம்பல் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள், மக்கள் பிரதிநிதிகள், வெளிஆட்கள் முன்அனுமதியின்றி சம்பவம் நடந்த பகுதிக்குள் நுழைவுதற்கு தடை விதித்து, ஆட்சியர் ராஜேந்திர பைஸியா உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.