உருவானது ஃபெஞ்சல் புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுள்ளது. ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், நாளை மதியம்  காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டு, வலுவிழக்கும் என கூறப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று பிற்பகல் புயலாக வலுப்பெற்றுள்ளது. ஃபெஞ்சல் என பெயர்சூட்டப்பட்டுள்ள இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல் 2.30 மணி அளவுக்கு கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து 260 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 270 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக இன்று, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை மிக முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர்  மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

நாளை மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி,  கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.   

வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலை முதல் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Night
Day