உற்பத்தித்துறையில் மிகவும் பின்தங்கி விட்டது இந்தியா - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத் தலைவர் உரையில் எந்த முக்கிய அம்சங்களும் இல்லை என்றும் அரசாங்கம் செய்த விஷயங்களின் அதே சலவை பட்டியல்தான் இடம்பெற்றதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. இதில் மக்களவை தொடங்கியதும், பிரயாக்ராஜ்  மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தது தொடர்பாக  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேசைகளைத் தட்டி முழக்கங்களை எழுப்பினர். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் பட்டியலை வெளியிடுமாறு கோரினர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எதிர்வினையாற்றினார். மேசையை உடைக்கத்தான் மக்கள் உங்களை இங்கு அனுப்பினார்கள் என்றால், இன்னும் கடுமையாக தாக்குங்கள் எனக் கூறினார். இதையடுத்து அவை நடவடிக்கைகள் சுமுகமாகின. தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியா வேகமாக வளர்ந்திருந்தாலும், நாம் எதிர்கொண்ட ஒரு உலகளாவிய பிரச்சனை வேலையின்மை என தெரிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசோ அல்லது இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசோ, இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து தெளிவான பதிலை வழங்கவில்லை என ராகுல் காந்தி கூறினார். 

உற்பத்தி துறையில் இந்தியா பின்தங்கி உள்ளதாக கூறிய அவர், சீனப் பொருட்களுக்கான சந்தையாக இந்தியா மாறி விட்டதாக குறிப்பிட்டார். மேக் இன் இந்தியா திட்டத்தின் முடிவு, 2014 இல் 15 புள்ளி 3 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது 12 புள்ளி 6 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது என குறிப்பிட்டார். இது 60 ஆண்டுகளில் உற்பத்தியின் மிகக் குறைந்த பங்கு என்றும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.

இதற்காக பிரதமரை குறை கூறவில்லை என்றும் அவர் முயற்சிக்கவில்லை என்று சொல்வது நியாயமாக இருக்காது என்றும் தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் முயற்சித்தார், ஆனால் அவர் தோல்வியடைந்தார் என்று தெரிவித்தார்.

Night
Day