எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடத்தல் சம்பவம், பலூர் பயங்கரவாதிகளின் 48 மணி நேர கெடு, தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு, அடுத்தடுத்து நிகழ்ந்த பலி என 400 பயணிகளுடன் பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. கடத்தல் நடந்தது எப்படி, பிணை கைதிகள் மீட்கப்பட்டது எப்படி? பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கை என்ன? இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
மிக உயரமாக மலை முகடுகளுக்கு இடையே பயணிகளை ஏற்றிக் கொண்டு அசைந்தாடி சென்று கொண்டிருந்த ரயிலை பயங்கரவாதிகள் வெடி வைத்து தடம்புரளச் செய்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தான் இவை..
கடந்த மார்ச் 11ம் தேதி பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் 9 பெட்டிகளுடன் சுமார் 400 பயணிகளை ஏற்றிக் கொண்டு வழக்கம் போல் புறப்பட்டது. குவெட்டாவிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடாலர் மற்றும் பிறுகோனேரி மலைப்பகுதிக்கு அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட பெருஞ்சத்தம் பயணிகளின் காதுகளை பிளந்தது.
என்ன சத்தம் என யோசிப்பதற்குள்ளாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. விபத்து என பதறிப்போன பயணிகளுக்கு அதைவிட பயங்கரமான அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. பலூச் விடுதலைப் படையை சேர்ந்தவர்கள், ரயிலை தடம்புரளச் செய்து, சிறைபிடித்திருக்கிறார்கள் என்பது தான் பயணிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சியே.
பலூசிஸ்தான் தலைநகரான குவெட்டாவுக்கும் சிப்பிக்கும் இடையில் 100 மீட்டருக்கும் அதிகமான, மிகவும் கடினமான மலைப்பகுதி நிறைந்தது தான் போலான் கணவாய் பகுதி. கோல்பூரில் இருந்து குவெட்டாவின் தென்கிழக்கே உள்ள சிப்பி வரையிலான ரயில்பாதையில் மட்டும் 17 சுரங்க பாதைகள் உள்ளன. கடினமான நிலப்பரப்பு காரணமாக போலான் கணவாய் பகுதியை கடக்கும் ரயில்கள் மெதுவாகவே செல்வது வழக்கம். இதை பயன்படுத்தியே பலூச் விடுதலை படை பயங்கரவாதிகள் ரயிலை ஹைஜேக் செய்தனர். தடம்புரண்ட ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள், பயங்கர ஆயுதங்களுடன் ரயில் கடத்தப்பட்டிருப்பதை அறிந்து பெரும் பதைபதைப்புக்கு ஆளாகினர்.
திகைத்து நின்ற பயணிகளை அச்சம் கொள்ள வேண்டாம் என ரயிலில் பயணித்த பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் ஆசுவசபடுத்திக் கொண்டிருக்கும் போதே, துப்பாக்கி குண்டுகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன. குண்டுகள் அனைத்தும், பயணிகளின் பாதுகாப்பு கவசமாக நின்றிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களை துளைத்து துவம்சம் செய்தது.
இதையடுத்து கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இழந்த பயணிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கினர். இதையடுத்து பிணை கைதிகளை மீட்கும் நடவடிக்கையில், களத்தில் இறங்கியது பாகிஸ்தான் ராணுவம். எஃப்சி, எஸ்எஸ்ஜி மற்றும் விமானப்படை என பாகிஸ்தானில் உயர்மட்ட ராணுவம் களமிறக்கப்பட்டது. 2 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் பலூச் பயங்கரவாதிகளை எதிர்கொண்டு நடத்திய தாக்குதலில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து 340க்கும் மேற்பட்ட அப்பாவி பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளுடனான சண்டையில் 30 பாகிஸ்தான் ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணயக் கைதிகளுக்கு ஈடாக, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் பலூச் அரசியல் கைதிகளை விடுவிப்பதே, பயங்கரவாதிகள் கோரிக்கையாக இருந்ததாக தெரிகிறது. சுமார் 30 மணி நேரம் கடுமையாக போராடி பயங்கரவாதிகளிடம் இருந்து பிணைக் கைதிகளை பாகிஸ்தான் ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது. ரயில் கடத்தப்பட்ட இடம் மலைப்பகுதி என்பதாலும், பயணிகளை மனித கேடயமாக பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாலும், மீட்பு பணியை கவனமாக மேற்கொண்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.